Pongu Tamizh Pongu Tamizh  

பழைய எல்லைகளைக் தாண்டி, புதிய திசைகளை நோக்கி!

பழைய எல்லைகளைக் தாண்டி, புதிய திசைகளை நோக்கி!
அன்பரசன்

 

புதியதொரு விதி செய்வோம்!

அதை எந்நாளும் வளர்த்தெடுப்போம்!!

தமிழ் ஒரு செழிப்பான மொழி. அது வளமான பெருமைக்குரிய பண்டைய இலக்கியத்தை தன்னகத்தே கொண்டுள்ளது. தொன்மையான வரலாறும், சிறப்பான பண்பாட்டு அம்சங்களும் அதற்கு உண்டு.

அறிவியலுக்கு முன்னுதாரணமாக திருக்குறளும், முன்னுதாரண அறிஞனாய் வள்ளுவரும் இருப்பது மகிழ்ச்சிக்குரியது. அத்துடன் அறநெறிக்கு முன்னுதாரணமாய் ஒளவைப் பிராட்டியும், அவரது அறநெறிகளும் உள்ளன. அவர் தனது அறநெறிகளை குழந்தைகளுக்கு ஊட்டுவதிலிருந்து ஆரம்பித்திருப்பது மிகச்சிறந்த வழிமுறையாகும்.

இந்த வேர்களில் இருந்து அறிவியலையும், பண்பாட்டையும், அறநெறிகளையும் வளர்தெடுத்து ஒரு புதிய சமூகத்தை, புதிய நாகரீகத்தை கட்டியெழுப்ப வேண்டிய பணி எமக்கு இப்போது அவசியமாகின்றது.

எமக்கு ஈழத்து பூதந்தேவனார் என்ற ஒரு குறிப்பு அறிவியலில் கிடைத்துள்ள போதிலும் அவர் குறித்து போதிய தகவல்கள் இல்லை. ஆயினும் ஈழத்து இலக்கியம், அறிவியல் பற்றி பேசுவதற்கு எமக்கு அவரொரு முதலாவது குறியீடாக உள்ளார்.

எம்முன்னோர் நீண்டதூரப் பார்வையுடன் அரசியல், பொருளாதார, சமூகச் சிந்தனையற்று இருந்ததன் விளைவாக, இன்று நாம் சொல்லொண்ணாத் துயரத்திற்கு உள்ளாகியுள்ளோம். வீடு, வளவு, சீதனம் என்ற சிந்தனை மேலோங்கியளவுக்கு சமூகப் பார்வையும், சமூகக் கட்டுமானங்களும் எமது சிந்தனையில் முதன்மை பெறத் தவறின. குறிப்பாக அரசியல் பற்றிய நீண்டதூரப் பார்வை பல நூற்றாண்டுகளாய் எம்மத்தியில் வளர்ச்சி பெறத் தவறின.

இப்போது நாம் புதுப் பொலிவுடன் ஒரு புதிய பண்பாட்டை எமது வேரிலிருந்து கட்டியெழுப்ப வேண்டியவர்களாக இருக்கின்றோம். எமது குழந்தைகள் பற்றிய சிந்தனையிலிருந்து அகமும், புறமும், சூழலும் சார்ந்த வளர்ச்சியில் இருந்து புதிய உலகக் கண்ணோட்டத்தோடு நாம் உன்னதமான நாகரீகத்தைக் சொல்லிலும், செயலிலும் கட்டியெழுப்பியாக வேண்டும்.

தொன்மையான வரலாற்றைக் கொண்ட நாம், சிறந்த பண்பாட்டு மூலங்களைக் கொண்ட நாம் இன்று உலகில் நாலாபுறங்களிலும் அந்நியர்களாக வாழ்கின்றோம். அந்நிய மண்ணில் மதிப்பின்றி, ஒட்டுறவின்றி, முகமின்றி எங்கள் மக்கள் கூனிக்குறுகி ஒடுங்கி வாழும் நிலையுள்ளது. சொந்த மண்ணில் அடிமைகளாய் சப்பாத்துக் கால்களால் நசிக்கப்படுகின்றோம். நிமிர்வின்றி, சொந்தச் சிந்தனையின்றி, சுய நெறியின்றி, வாழ்வில் சுயமின்றி அவஸ்த்தைப்படுகின்றோம்.

எம்முன்னோர் ஆழமாகவும், தூரநோக்குடனும், உயர்ந்த பண்பாட்டு விழுமியங்களுடனும் சிந்திக்கத் தவறியதன் விளைவே நாம் இன்று அனுபவிக்கும் துயரங்களுக்கான அடிப்படைகளாகும். பலவேளைகளில் பல பெரியார்கள் எம்மத்தியில் தோன்றியிருந்தனர் என்பது உண்மை. ஆனால் அரசியல் பார்வையுடனும், உலகளாவிய கண்ணோட்டத்துடனும் புதிய உலகிற்கு பொருத்தமான வகையில் சமூகம் சிந்தனாபூர்வமான வளர்ச்சி அடையத் தவறியது. இப்போது அந்த வெற்றிடத்தையும் சேர்த்து ஒடுக்கப்படும் தமிழீழ மக்களை புதிய சமூகமாய் சமூக அரசியல் பண்பாட்டுச் சிந்தனையுடன் கட்டியெழுப்ப வேண்டும்.

இல்லாதவற்றை இருந்ததாக வரண்ட பெருமைகள் பேசிக் கொண்டிருப்பதைவிட்டு, கடந்த காலத்தில் ஏற்பட்ட வெற்றிடங்களைக் கணக்கில் எடுத்து புதிய காலத்தை நாம் வடிவமைக்க வேண்டும். இயல்பாகவே கல்வியில் ஆர்வம் காட்டும் சிறப்பான பண்பாடும், பாரம்பரியமும் எம்மிடம் உண்டு. இந்தவகையில் ஒளவையின் அறநெறி அடிச்சுவட்டைப் பின்பற்றி புதிய அறநெறிகளுடன், சிறப்பான அரசியல் அறநெறிகளுடனும், அரசியல் பண்பாட்டுடனும், சமூக உணர்வுடனும் எமது சிறார்களை கல்வியூட்ட வேண்டியுள்ளது.

21 ஆம் நூற்றாண்டு துயரகரமாய் எமக்கு விடிந்துள்ளது. இந்நூற்றாண்டிற்குரிய பரந்த உலகப் பார்வையோடு எமக்கே உரிய சிறப்பான பண்பாட்டோடும் புத்தம் புதிய சமூகமாய் நாம் எழவேண்டும். அறிவியல் விஞ்ஞான வளர்ச்சி, பரந்த ஜனநாயகப் பண்பாடு, பரஸ்பர விட்டுக்கொடுப்புடன் கூடிய சமூக ஒருங்கிணைப்பு, மனித சாரம்சத்தின் மீதான உயர்ந்த மதிப்பு, அன்னியோன்னியம், கூட்டு வாழ்வு, குழந்தைகளையும் முதியோர்களையும் பெரிதும் மதிக்கின்ற ஒர் உன்னதப் பண்பாடு, புதிய கண்டுபிடிப்புக்கள் மீதான ஆர்வமும், அதற்கான இலட்சியங்களும், உன்னதங்களுக்கான உயரிய சிந்தனைகளும் சமூக சமத்துவம் பற்றிய ஆழமான எண்ண உணர்வுகளும், அவற்றிக்கான வாழ்க்கை முறைகளும் கொண்ட ஒரு சமூக பண்பாட்டை நாம் கட்டியெழுப்ப வேண்டும்.

வாழ்வில் சுதந்திரம், எண்ணத்தில் சுதந்திரம், சிந்தனையில் சுதந்திரம், சுயமாய் இருக்க சுதந்திரம், கூடிக்குலாவச் சுதந்திரம் என சுதந்திர எண்ணத்தாலும் அதற்கான செயல்களாலும் நாம் முன்னுதாரணம் மிகுந்த பண்பாட்டினராக வேண்டும். எங்கும் அடிமைத்தனம், எதிலும் அடிமைத்தனம் என்ற துயரம் எமக்கு வேண்டாம். யாருக்கும் பின்னால் அலையும், கையேந்தும் வாழ்வும் எமக்கு வேண்டாம். கௌரவமான மக்கள் நாங்கள். கௌரவம் எமக்கு தலையாயது. தலைகுனியா வாழ்வு எமக்கு வேண்டும்.

குழந்தைகளைச் சிந்திக்கத் தூண்டுவதும், சுயமாக அவர்களை சிந்திக்க விடுவதும் எமது பண்பாட்டின் அடித்தளமாய் அமையட்டும். சமூக சமத்துவம் எமது அறநெறிக்கான அகரவரிசையாய் அமையட்டும். இறந்தோரை மதித்து அன்பு செலுத்தி 31 நாள் துக்கம் அனுஷ்டிக்கும் சிறந்த பண்பாட்டைக் கொண்ட மக்கள் நாங்கள். இறந்தவரை மலர்களால் அர்ச்சித்து, இனிய சுவைமிகு உணவுப் பண்டங்களை இறந்தவருக்கு அர்ப்பணித்து மனமுருகி நிற்கும் பண்பாட்டைக் கொண்டவர்கள் நாங்கள்.

இறந்து போன பாட்டன், பூட்டன் வரை தவறாது ஆண்டுத் திவசம் செய்து, அமாவசை, பௌர்ணமி விரதம் இருந்து இறந்தோரை அர்ப்பணிப்புடன் நினைவில் நிறுத்தும் பண்பாட்டைக் கொண்டவர்கள் நாங்கள். அதாவது சமய கிரிகை என்பதற்கு அப்பால் இறந்தோரைப் பூசிக்கும் ஓர் உயர்ந்த கலாச்சார உயர் விருப்பத்தை நாம் அவதானிக்க வேண்டும்.

இற்றைக்கு 40 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மலர்களால் அர்ச்சிக்கப்பட்ட ஒரு புதைகுழி மேற்காசிய மண்ணில் இருந்துள்ளது என்பதை தொல்பொருள் ஆய்வு காட்டுகிறது. இது இனம், மதம், மொழி, பிரதேசம் கடந்த ஓர் உயரிய மனித விழுமியமாகும். இத்தகைய விழுமியத்தை மனம் ஒன்றிப் பின்பற்றும் மக்கள் கூட்டமாய் நாம் இருக்கிறோம் என்பது மகிழ்ச்சிக்குரியது. ஆனால் இந்த விழுமியம் உயிர் வாழ்விலும் பல உண்மைகளை போதிக்கின்றது என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. இறந்தவர்களை நினைவு கூர்வது என்பது, அவரைப் பூசிப்பது என்பது உயிருடன் வாழ்வோர் மீதான அன்பையும், கரிசனையையும், அன்னியோன்னியத்தையும் அதிகம் வளர்க்க உதவும் ஒரு தூண்டு கோலாகும்.

தவறின்றி வாழ்வில் யாருமில்லை. பூர்ணமானதென்று இந்த பூமியில் எதுவுமில்லை. தவறேற்படுவது இயல்பு. அதைப் புடமிடத் தவறுவதே குற்றம். ஆதலால் இடையறாது எம்மை புடமிட வேண்டியது அவசியமாகும். எங்கள் பிள்ளைகளிடம் பரந்த உலகளாவிய மற்றும் பிரபஞ்சம் தழுவிய உன்னத சிந்தனைகள் திட்டமிட்டு வளர்தெடுக்கப்பட வேண்டும். குழந்தைகளுக்காகவும், முதியோர்களுக்காகவும் அர்ப்பணிப்புடன் சிந்திக்கவும், செயற்படவும், உழைக்கவும் வேண்டிய பாரிய பொறுப்பு இளையோருக்கே உண்டு. அதேவேளை இளம் தலைமுறையினரின் ஆசாபாசங்களை வரண்ட கண்களால் பார்க்காது விட்டுக்கொடுப்புடனும், செழிப்புடனும் பார்க்க கூடிய சமூக உள்ளடக்கம் எம்மிடம் உணர்வு பூர்வமாய் வளரவேண்டும்.

எங்கள் பிள்ளைகள் எங்கள் மக்கள் அகால வயதில் தம் வாழ்வை இழந்து போகும் துயரம் எமக்கேற்ப்பட்டுள்ளது. எங்கள் நெஞ்சங்கள் கசக்கிப் பிழியப்படும் ஒரு துயரமான வாழ்வு எம்முன்னோரால் எமக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது. எமது துயரங்களிற்கு எதிரி மட்டும் காரணமல்ல. கூடவே எமது தவறான சிந்தனைகளும், தவறான போக்குகளும் காரணங்களாகும். எம்மை நாம் ஆழ்ந்து அவதானித்து புதிய சமூகப் பார்வையுடன் புதிய விடிவுக்காய் வழிசமைக்க வேண்டும்.

தலை நிமிர்ந்த வாழ்வும், சுதந்திரமும் எமது பிறப்புரிமை. கருவறை தொட்டு கல்லறை வரை சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம், ஜனநாயகம், சமூக ஐக்கியம் என்பன வாழ்வின் அடிப்படைகள் என மனதில் நிறுத்துவோம். சுயம், தமிழ்தேசியம், சர்வதேசியம், உலகளாவிய பார்வை என எமது சிந்தனை ஓர் ஒருங்கிணைப்பைப் பெறவேண்டும்.

இப்போது எமது அவசர பணி எண்ணத்திலும், உணர்விலும் சுய வாழ்விலும், குடும்ப வாழ்விலும், பொது வாழ்விலும் 21 ஆம் நூற்றாண்டுக்குரிய புதிய உலகக் கண்ணோட்டத்துடன் சிறப்பான அரசியல் சிந்தனையுடனும், அதற்கான நடைமுறைகளுடன் கூடிய ஓரு சிறந்த பண்பாட்டைக் கட்டியெழுப்ப நாம் முனைய வேண்டியது தான்.

இறந்த, கொல்லப்பட்ட எமது மக்களின் பெயரால் நாம் ஒர் ஐக்கியப்பட்ட மக்களாய் புதிய சிந்தனையுடனும், புதுப் பொலிவுடனும் நிமிர வேண்டும். எம்மத்தியில் உள்ள குறுகிய பேதங்களையும், உழுத்துப் போன பழக்கவழக்கங்களையும் கைவிட்டு திடமான உறுதியான ஒர் உன்னத சமத்துவ சமூகத்தை கட்டியெழுப்ப எம் அனைத்து வளங்களையும், எமது மனங்களையும் நாம் திருப்ப வேண்டும்.

5/31/2010 6:28:37 AM

உங்கள் கருத்துக்களை பதிவு செய்க:

 
புதினங்கள்
செய்திகள்